search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்று மோதல்"

    புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. #ProKabaddiLeague
    மும்பை:

    6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு அரங்கேறுகிறது.

    ரோகித் குமார் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணி லீக் சுற்றில் 13 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (பி) முதலிடம் பிடித்ததுடன், முதலாவது தகுதி சுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்சை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக்கில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடத்தை பெற்றது. பின்னர் முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்சிடம் தோல்வி அடைந்தாலும், 2-வது தகுதி சுற்றில் உ.பி.யோத்தாவை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    இவ்விரு அணிகளும் முந்தைய சீசனில் ஒரு முறை இறுதிப்போட்டிக்கு வந்திருந்தாலும் அதில் தோற்று இருந்தன. அதனால் தற்போது முதல் முறையாக கோப்பையை வெல்வதில் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள். சமபலம் பொருந்திய அணிகள் என்பதால் ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.

    இந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் லீக் ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.

    இறுதிப்போட்டி குறித்து குஜராத் கேப்டன் சுனில் குமார் கூறுகையில் ‘இந்த சீசன் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முதல்முறையாக கேப்டனாகி அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுள்ளேன். தொடர் முழுவதும் ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நாங்கள், கோப்பையை வெல்ல ஆவலாக இருக்கிறோம். பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் நாங்கள் சில தவறுகளை இழைத்து விட்டோம். அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்வோம்’ என்றார்.

    பெங்களூரு புல்ஸ் கேப்டன் ரோகித் குமார் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த அருமையான வாய்ப்பை நாங்கள் நழுவ விடமாட்டோம். இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் எங்களுடைய நோக்கம் கோப்பையை வெல்வது தான். எங்களது ரைடை வலுப்படுத்துவதிலும், டேக்கிள்சை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடினோம். இறுதிப்போட்டியிலும் நிச்சயமாக எதிரணிக்கு கடும் சவாலாக விளங்குவோம்’ என்றார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.8 கோடியாகும். இதில் கோப்பையை வெல்லும் அணி ரூ.3 கோடியையும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.1.80 கோடியையும் பரிசாக பெறும்.

    இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #ProKabaddiLeague
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்திற்காக இந்தியா-வங்காளதேச அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன. #AsiaCup2018 #INDvBAN
    துபாய்:

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, பாகிஸ்தான் உள்பட 4 அணிகள் வெளியேற்றப்பட்டன.



    இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியாவும், வங்காளதேசமும் துபாயில் இன்று (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.

    இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி இந்தியா தான். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக அமர்க்களப்படுத்திய இந்தியா, குட்டி அணிகளுக்கு எதிராக தகிடுதத்தம் போட்டது. ஹாங்காங்குக்கு எதிரான லீக்கில் பெரும் போராட்டத்திற்கு பிறகே வெற்றி கிடைத்தது. 

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோல்வியில் இருந்து தப்பித்து சமன் (டை) செய்ததே பெரிய விஷயமாகும். அதே சமயம் பாகிஸ்தானை இரண்டு முறையும், வங்காளதேசத்தை ஒரு முறையும் குறைந்த ரன்களில் சுருட்டி புரட்டியெடுத்தது.

    தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும் (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 269 ரன்), துணை கேப்டன் ஷிகர் தவானும் (2 சதம் உள்பட 327 ரன்) தான் இந்தியாவின் பேட்டிங் தூண்கள் ஆவர். அவர்கள் விளையாடிய 4 ஆட்டங்களிலும் பிரமாதமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்து வெற்றிக்கு வழிவகுத்தனர். 

    அதே போல் முக்கியமான இந்த ஆட்டத்திலும் அவர்கள் பதற்றமின்றி இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடுகிறார்கள். மிடில் வரிசையில் விக்கெட் கீப்பர் டோனி, கேதர் ஜாதவின் தடுமாற்றம் பலவீனமாக பார்க்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் 2-வது பேட்டிங்கில் 240 ரன்களை ‘சேசிங்’ செய்வது கூட கடினமாகி விடும். இவர்கள் பார்முக்கு திரும்பினால் அணி மேலும் வலுவடையும்.

    வேகம் குறைந்த இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர்குமாரும் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

    மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணியில் காயம் காரணமாக தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன் ஆகிய முன்னணி வீரர்கள் விலகி விட்டனர். முஷ்பிகுர் ரஹிம் (ஒரு சதம் உள்பட 297 ரன்), முகமத் மிதுன், மக்முதுல்லா ஆகியோரைத் தான் அந்த அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால், நிச்சயம் இது பரபரப்பான போட்டியாக அமையும்.

    சர்வதேச கிரிக்கெட்டில் வங்காளதேச அணி இதுவரை 8 ‘நாக்-அவுட்’ சுற்றில் விளையாடி இருக்கிறது. அவை அனைத்திலும் தோல்வியே மிஞ்சியது. இதில் இந்தியாவுக்கு எதிராக 4 ஆட்டங்களும் அடங்கும். எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது வங்காளதேசத்துக்கு வரலாற்று சாதனையாக பதிவாகும்.

    ஆசிய கிரிக்கெட்டில் இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் கோட்டைவிட்ட வங்காளதேசம் இந்த முறை கூடுதல் உத்வேகத்துடன் களத்தில் வரிந்து கட்டும். ஏற்கனவே சூப்பர்-4 சுற்றில் இந்தியாவிடம் அடைந்த படுதோல்விக்கும் பழிதீர்க்க தீவிரம் காட்டுவதால், இன்றைய மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    வங்காளதேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் கையே ஓங்கி நிற்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்திய வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். ஒருங்கிணைந்த முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், இந்தியாவின் கையில் 7-வது முறையாக ஆசிய கோப்பை தவழ்வதை யாராலும் தடுக்க முடியாது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், டோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், பும்ரா.

    வங்காளதேசம்: லிட்டான் தாஸ், சவும்யா சர்கார், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், முகமத் மிதுன், இம்ருல் கேயஸ், மக்முதுல்லா, மெஹிதி ஹசன், மோர்தசா (கேப்டன்), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஜூர் ரகுமான்.

    இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.  #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. #AsiaCup2018 #INDvHK
    துபாய்:

    14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ஹாங்காங் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 116 ரன்னில் சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது.

    கேப்டன் விராட்கோலிக்கு இந்த போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காணுகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், கேதர் ஜாதவ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். முன்னாள் கேப்டன் டோனி பேட்டிங் பார்ம் எப்படி? இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. அவர் வழக்கமாக களம் காணும் வரிசையில் இருந்து மாறி முன்னதாக களம் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அடுத்த நாளில் பாகிஸ்தானை சந்திக்க இருப்பதால் இந்திய அணி தனது பேட்டிங் வரிசையை பலப்படுத்த பரிசோதனை முயற்சியில் ஈடுபடக்கூடும்.

    பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோரும், சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். காயத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கும் புவனேஷ்வர்குமார் தனது அனுபவ பந்து வீச்சின் மூலம் ஜொலிப்பார் எனலாம். வலுவான இந்திய அணியை கத்துக்குட்டி அணியான ஹாங்காங் சமாளிப்பது கடினமானதாகும். ஆச்சரியம் நடந்தால் மட்டுமே அந்த அணி தொடக்க ஆட்டத்தில் கண்ட சரிவில் இருந்து மீண்டு வந்து இந்திய அணிக்கு சவால் அளிக்க முடியும்.

    இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது. ஹாங்காங் அணி தோல்வி கண்டால் போட்டியில் இருந்து வெளியேறி விடும். இரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. 2008-ம் ஆண்டில் ஆசிய கோப்பை லீக் ஆட்டத்தில் மோதிய அந்த சந்திப்பில் இந்திய அணி 256 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை விரட்டியடித்து இருந்தது.

    இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே அல்லது கேதர் ஜாதவ், டோனி (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.

    ஹாங்காங்: அன்சூமான் ராத் (கேப்டன்), பாபர் ஹயாத், கின்ஜித் ஷா, கிறிஸ்டோபர் கார்டர், இசான் கான், அய்ஜாஸ் கான், ஸ்காட் மெக்கெச்னி, தன்விர் அப்சல், இசான் நவாஸ், நதீம் அகமது, நிஜாகட் கான்.

    இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.  #AsiaCup2018 #INDvHK
    ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா-ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு சந்திக்கின்றன. #KKR #RR #IPL2018 #Playoff
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.

    தனது கடைசி லீக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்த கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக இருக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கைதேர்ந்தவராக திகழும் தினேஷ் கார்த்திக் (438 ரன்), ஆல்-ரவுண்டராக ஜொலிக்கும் சுனில் நரின் (327 ரன் மற்றும் 16 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல் (264 ரன் மற்றும் 13 விக்கெட்), அதிரடியில் மிரட்டும் கிறிஸ் லின் (425 ரன்) ஆகியோர் தான் அந்த அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சொந்த ஊரில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும்.



    ஏற்கனவே லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை இரண்டு முறையும் வீழ்த்தியிருப்பதால் அதே ஆதிக்கத்தை தொடருவதில் கொல்கத்தா அணி மும்முரமாக இருக்கிறது.

    தொடக்கத்தில் தடுமாறிய ராஜஸ்தான் அணி ஒரு வழியாக போராடி அதிர்ஷ்டத்தின் துணையுடன் ‘பிளே-ஆப்’ சுற்றை (14 புள்ளி) எட்டியது. முன்னணி வீரர் ஜோஸ் பட்லர் (548 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் இல்லாத நிலையிலும் கடைசி லீக்கில் பலம் வாய்ந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சாய்த்ததால் ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் அந்த அணியின் துருப்பு சீட்டாக பார்க்கப்படுகிறார்கள். முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ராஜஸ்தான் தயாராகி வருவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

    இந்த மைதானத்தில் இந்த சீசனில் நடந்த 7 லீக் ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணியே 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு இருக்கிறது.

    இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேற்றப்படும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:-

    கொல்கத்தா: கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், நிதிஷ் ராணா, சுப்மான் கில், பியூஸ் சாவ்லா, ஜாவோன் சியர்லெஸ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.

    ராஜஸ்தான்: ராகுல் திரிபாதி, ஜோப்ரா ஆர்ச்சர், ரஹானே (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென், கிருஷ்ணப்பா கவுதம், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயாஸ் கோபால், சோதி, உனட்கட், லாக்லின்.

    இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  #KKR #RR #IPL2018 #Playoff
    ×